பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக சட்டப்படி தீர்வு காணலாம் என சட்டப் பிரிவுகள் சொல்கிறது. மகளிர் தினத்தில் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
வேலை பார்க்கும் இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் வார்த்தைகளை கூறுவது, ஆபாசப் படங்கள் அல்லது கதைகளைக் காட்டுவது, ஆசைக்கு இணங்குமாறு கூறப்படும் வார்த்தைகள் அல்லது வேண்டுகோள், புண்படுத்தப்படுவதாகவோ, அவமானப் படுத்துவதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ ஒரு நபரை உணர வைக்கும் பாலியல் துன்புறுத்தல், சைகை மூலம் பாலியல் கோரிக்கைகளை முன் வைப்பது, பாலியல் சீண்டல் அல்லது தொடர்புகளுக்கு மறுப்பு தெரிவித்தால் வேலை, பதவி உயர்வு, பணி நிலை போன்றவை பாதிக்கப்படக்கூடும் என்று ஒரு பெண்ணை நிர்பந்திப்பது உள்ளிட்டவைகளாகும்
55 சதவீதம் பெண்கள் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதாகவும், சுமார் 68 சதவீதம் பெண்கள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. 97 சதவீதமாக இருந்த பெண்களின் பாதுகாப்பு தற்போது 85 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்படி இத்தகையை பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று முன்னாள் அரசு வழக்கறிஞரான ராதிகா செந்தில் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.
நமது இந்திய அரசால், பணியிடத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் POSH ACT 2013 ( Prevention, Prohibition and Redressal Act) இதில் ஒரு பெண், தனது அலுவல் இடத்தில், எந்த ஒரு ஆண் நபரால், தொடுதல் மற்றும், தொட முயற்சித்தல், பாலியல் ரீதியான விஷயங்களைக் கோருதல், பாலியல் தொனியில் பேசுதல், ஆபாச படங்களைக் காண்பித்தல் மற்றும், உடல் ரீதியான அல்லது வார்த்தைகள், சைகைகள் கொண்ட நடத்தையில் ஈடுபடுதல், ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால், அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகுதல் என கருதப்படுவதாக இச்சட்டம் சொல்கிறது.
இச்சட்டத்தின் மூலம் அரசு மற்றும், தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்கள், அரசு சாரா அமைப்பு, பள்ளி நிறுவனங்கள்,கேளிக்கை இடங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள் (நோயாளிகள்) மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் பயன்பெறும் வகையில் இயற்றப்பட்ட சட்டமாகும். இச்சட்டத்தின் மூலம், வீட்டு வேலை செய்யும் பெண்கள். தினக்கூலிகள் மூலம் பணி செய்யும் பெண்களும் பயன்பெறலாம்.
புகார் அளிக்கும் முறை
1. உள் புகார் குழு (ICC) Internal complaint committee:
எந்த ஒரு நிறுவனத்தில், 10 நபர்களுக்கு மேல் பணி புரிகிறார்களோ, அங்கு ஒரு உள் புகார் குழு அமைக்கப்பட்டிருக்கும், நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், தான் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டிருந்தால், அந்த குழுவிற்கு புகார் அளிக்கலாம்.
2). உள்ளூர் புகார் குழு (LCC) Local Complaint committee:
பணியிடத்தில் 10 நபர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள், வீடு மற்றும் இதர பணி செய்யும் பெண்கள், பாலியல் அத்து மீறல்களுக்கு ஆட்பட்டிருந்தால், இந்த உள்ளூர் புகார் குழுவில் புகார் அளிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரால் தாலுகா, நகராட்சி மற்றும், அனைத்து தொகுதியிலும், அமைக்கப்பட்டிருக்கின்ற புகார் குழுவில், தனது புகாரினை அளிக்கலாம். புகார் கொடுக்கப்பட்ட 90 நாட்களில் புகாரானது, விசாரிக்கப்பட்டு தீர்வுக்கான வழிவகை காணப்படும். பாதிக்கப்பட்ட நபர் 3 மாதத்திற்குள்ளாக புகார் அளிக்க வேண்டும்.
இப்படி தைரியமாக செயல்ப்பட்டு தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளில் எதிராளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர பணிக்குச் செல்லும் பெண்கள் முன்வர வேண்டும்.