புதுடெல்லி: டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இந்த விசாரணை குழுவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர், டெல்லி அரசின் முதன்மை செயலர், டெல்லி சிறப்பு காவல் ஆணையர், தீயணைப்புத் துறை ஆலோசகர், மத்திய உள்துறை இணை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 30 நாட்களுக்குள் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்களை இந்த குழு பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.
டெல்லி ராஜிந்தர் நகரில் உள்ள ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென மழை வெள்ளம் புகுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தில் இருந்த இரு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பல்வேறு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பயிற்சி மைய நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மாணவ, மாணவிகளின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.