மத்திய அரசின் ‘மலிவு விலை தக்காளி’ விற்பனை தொடக்கம்

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் நகர் பகுதிகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.

தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற வீதி, மத்திய அரசு அலுவலக வளாகம், லோதி காலனி, ஐடிஓ, ஐஎன்ஏ மார்கெட், மண்டி ஹவுஸ், துவாரகா, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட 18 சில்லறை விற்பனை மையங்களிலும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “தக்காளி மூன்று இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் லாபமடைவது தடைக்கப்பட்டு, நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். வரும் நாட்களில் சில்லறை விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE