“ஏ1 அதானி, ஏ2 அம்பானி... நிர்மலா சீதாராமன் அல்வா...” - ராகுல் காந்தியின் மக்களவை சம்பவம்!

By KU BUREAU

புதுடெல்லி: மக்களவையில் தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானி பெயர்களை கூறுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்த அடுத்து, அவர்களை ஏ1, ஏ2 என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கள்கிழமை மக்களவையில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பெரும் தொழிலதிபர்களின் தனி உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹரியாணாவின் குருஷேத்ரத்தில், சக்கர வியூகத்தில் அபிமன்யு என்ற இளைஞனை 6 பேர் கொலை செய்தனர். வன்முறையும் அச்சமும் நிறைந்தது அந்த சக்கர வியூகம்” என்று அபிமன்யு கொல்லப்பட்ட மஹாபாரத சம்பவத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் அஜித் தோவல், மோகன் பகவத், கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 6 பேரது பெயர்களை குறிப்பிட்டு, சக்கர வியூக சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுலின் பேச்சை ஏற்க மறுத்து, இந்த அவையில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் குறித்து பேச வேண்டாம், விதிமுறைகளை பின்பற்றி பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, தனது உரையில், தொழிலதிபர்களின் பெயர்களை இனி குறிப்பிடமாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அந்த தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். அப்போது சபாநாயகர் ராகுல் காந்தியை மீண்டும் எச்சரித்தார். அதற்கு ராகுல் காந்தி அவர்களை எப்படி அழைப்பது? நான் வேண்டுமென்றால் அவர்களை நம்பர் 3 மற்றும் நம்பர் 4 என்று அழைத்துக் கொள்ளவா? அவ்வாறு அவர்களை அழைக்க வேண்டாம் எனில், அவர்களை எப்படி அழைக்கப்பது, மாற்றுப் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், அவர் இந்த நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் ஏகபோக உரிமைகளையும் அந்த இரண்டு தொழிலதிபர்களும் பெற்றுள்ளனர், என்றார். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் விதிகளுக்குப் புறம்பாக, சபாநாயகருக்கு சவால் விடும் வகையில் பேசுகிறார், என்றார். அதற்கு ராகுல் காந்தி, “மத்திய அமைச்சருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டது. அவர், ஏ1 மற்றும் ஏ2-வை பாதுகாக்க விரும்புவதை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களை பாதுகாக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவா ஜனநாயகம்?” என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான என்டிஏ அரசு, அதானி மற்றும் அம்பானியின் தொழில் சார்ந்த வணிகங்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், “பாஜக வகுத்துள்ள சக்கர வியூகம் கோடிக்கணக்கான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சக்கர வியூகத்தை நாங்கள் உடைக்கப் போகிறோம். இதைச் செய்வதற்கான வழி, உங்களைப் பயமுறுத்தும் ஒன்று. அதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு. இந்த அவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாத மசோதாவை இண்டியா கூட்டணி நிறைவேற்றும். அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். அது நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நடக்கும்.

இந்தியாவின் இயல்பு வேறு. ஒவ்வொரு மதத்திலும் சக்கர வியூகத்துக்கு எதிரான அமைப்பு உள்ளது. இந்து மதத்திலும் உள்ளது. பசுமைப் புரட்சி, சுதந்திரம், அரசியலமைப்பு ஆகியவற்றின் மூலம் நீங்கள் உருவாக்கிய சக்கர வியூகத்தை நாங்கள் உடைப்போம். நீங்கள் உங்களை இந்து என்று அழைக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு இந்து மதத்தை பற்றி புரியவில்லை.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் நிதியமைச்சகத்தில் நடைபெற்ற பாரம்பரிய அல்வா கிண்டும் விழாவில் ஒரு பழங்குடியினர், தலித் அதிகாரியை கூட காண முடியவில்லை. மொத்தம் 20 அதிகாரிகள் மத்திய பட்ஜெட்டை தயார் செய்தனர். அவர்களில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவரோ, தலித்தோ, பழங்குடியினரோ இல்லை. இந்திய மக்கள் தொகையில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், மத்திய பட்ஜெட் மூலமாக அவர்கள் எதையும் பெறவில்லை” என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.

மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டும் நிகழ்வின் புகைப்படத்தை கையிலெடுத்து காட்டியபடி ராகுல் காந்தி பேசியபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது கைகளை முகத்தில் வைத்து காட்டிய ரியாக்‌ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE