சுவரில் துளையிட்டு வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்: பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கோப்புகளுக்கு தீவைப்பு

By காமதேனு

வங்கி சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்களுக்குத் தீவைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் இமாச்சல் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் லாம்ப்லூவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கிளையில் நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஹமிர்பூரில் உள்ள சதார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்பி அசோக் வர்மா கூறுகையில், " முகமூடி அணிந்த இருவர், அதிகாலை 3 மணியளவில் வங்கியின் பின்புறம் சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் அங்கிருந்த 150-க்கும் மேற்பட்ட முக்கிய கோப்புகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்து அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. திருடர்கள் வங்கிக்குள் நுழைந்தவுடன் அலாரம் சிஸ்டம் அதிகாரிகன் செல்போன்களுக்கு செய்தி அனுப்பியது. இதையடுத்து அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் அங்கு செல்வதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். உள்ளே புகை வருவதைக் கண்டு தீயணைப்புத்துறையினரை வரவழைத்து தீயை அணைத்தோம். வங்கியில் பணம் பத்திரமாக உள்ளது. வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

இந்த கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ள போலீஸார் அவற்றை சோதனை செய்து வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகத்தாமதமாகவே தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE