புதுடெல்லி: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஒன்றின் அடித்தளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி மாநகராட்சி (எம்சிடி), 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்லி, பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தில், கடந்த சனிக்கிழமை இரவு மழை வெள்ளம் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பழைய ராஜேந்திரா நகரில் நேற்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், பருவ மழை முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாத டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அதிக கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு உரிய வசதிகளை செய்து தராத பயிற்சி நிறுவனத்தை கண்டித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் அதி விரைவுப் படையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர், சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் 13 சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டிட அடித்தளத்தை டெல்லி மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “ராவ்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவன சம்பவத்தில், அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததற்கான காரணத்தை ஆராய டெல்லி மாநகராட்சி தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
» பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்களிடையே மோதல்: 30 பேர் பலி, 145 பேர் படுகாயம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்வு: நீர்வரத்து 1.53 லட்சம் கன அடி!
அடித்தளமானது வாகனம் நிறுத்துவதற்கும், ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் நூலகமாகவோ அல்லது வாசிப்பு அறைக்காகவோ அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த பயிற்சி மையம் தீ தடுப்பு நிபந்தனைகளை மீறி செயல்பட்டு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.