பெங்களூரு: ஷீரடி காட் ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பெங்களூரு - மங்களூரு இடையேயான ரயில் போக்குவரத்து ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானக் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், எடக்குமேரி மற்றும் ஷீரடி காட் கடகர்வள்ளி இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் பாதை தடைப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஆகஸ்ட் 10- ம் தேதி வரை ரயில் போக்குவரத்து இருக்காது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் பட்டியலை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி வண்டி எண், 16511 கேஎஸ்ஆர் பெங்களூரு - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண். 16512 கண்ணூர்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண். 07378 மங்களூரு சென்ட்ரல் - விஜயபுரா சிறப்பு எக்ஸ்பிரஸ் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையும், வண்டி எண். 07377 விஜயபுரா-மங்களூரு ரயில் ஜூன்29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், வண்டி எண்.16585 எஸ்எம்விடி பெங்களூரு - முருதேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வண்டி எண். 16586 முருதேஷ்வர் - எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையும், வண்டி எண்.16595 கேஎஸ்ஆர் பெங்களூரு - கார்வார் சிறப்பு விரைவு ரயில் ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
» பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்களிடையே மோதல்: 30 பேர் பலி, 145 பேர் படுகாயம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்வு: நீர்வரத்து 1.53 லட்சம் கன அடி!
வண்டி எண் 16596 கார்வார் - கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையும், வண்டி எண். 16576 மங்களூரு சந்திப்பு - யஷவந்த்பூர் சந்திப்பு எக்ஸ்பிரஸ் ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வண்டி எண்.16575 யஷவந்த்பூர் - மங்களூரு ரயில் ஜூன் 31 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரையும், வண்டி எண். 16539 யஷவந்த்பூர் - மங்களூரு சந்திப்பு விரைவு ரயில் ஆகஸ்ட் 3 -ம் தேதி வரையும், வண்டி எண். 16540 மங்களூரு - யஷவந்த்பூர் ரயில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண். 16515 யஷவந்த்பூர் - கார்வார் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 29 . 31 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண். 16516 கார்வார் - யஷவந்த்பூர் ரயில் ஜூலை 30, ஆகஸ்ட் 1 மற்றும் 3 -ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் 400 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்யும் கனமழையையும் பொருட்படுத்தாமல் இந்த பணிகள் நடந்து வருகின்றன. பகல் ஷிப்டில் 200 பேர், இரவு ஷிப்டில் 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆறு ஹிட்டாச்சி இயந்திரங்கள் மற்றும் ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் மணலை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சுப்ரமணிய நிலையத்தில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக உணவு தயாரிப்பு, சப்ளை மற்றும் மருத்துவக் குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து பெங்களூரு - மங்களூரு இடையே விமான டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 3000-3500 ரூபாயாக இருந்த விமானக் கட்டணம் தற்போது 6604 ரூபாயாக அதிகரித்துள்ளது.