ஆட்டம் கண்ட அதானி குழுமம்: எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி சரிவு

By காமதேனு

அதானி குழும பங்குகளில் எல்ஐசி மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியயான பின்பு பங்குச்சந்தையில் அதானி குழு பங்குகள் ஆட்டம் காண ஆரம்பித்தது.

அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவீதம் முதல் 9.14 சதவீதம் வரை வாங்கியிருக்கிறது. இந்நிலையில், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022 டிச.31-ம் தேதி கிட்டத்தட்ட ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே, 2023 பிப்.23-ம் தேதி ரூ.33 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது.

அதாவது, ஜனவரி 24-ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81 ஆயிரம் கோடியாக இருந்தது. அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜன.30-ம் தேதிக்குப் பிறகு எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது.

இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவீதம் முதல் 9.14 சதவீதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவீதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

இது ஜனவரியில் 15் ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11் ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவீதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவீத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE