மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

By முருகன்.ர

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா பூஜைகள் தொடங்கியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. பார்வதி தேவி மனம் வருந்தி சிவபெருமானை வணங்கி பூஜித்ததால் இருண்ட உலகை சிவபெருமான் மீண்டும் சிருஷ்டித்த நாளே மகா சிவராத்தியாக கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி நாளில் இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு செய்தால் தங்கள் குடும்பம் செழித்தோங்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இதன்படி, கோயில், தீர்த்தம், ஸ்தலம் என முப்பெருமைகளுடன் காசிக்கு அடுத்த புண்ணியதலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி திருவிழா பிப்.11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதன்தொடர் நிகழ்வாக ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓம் நமசிவாய முழக்கம், ஸ்படிக லிங்க பூஜையுடன் சிவராத்திரி வழிபாடு துவங்கியது. நாளை (பிப்.19) காலை வரை சுவாமிக்கு விடிய விடிய நடைபெறும் சிவராத்திரி பூஜையில் பக்தர்கள் விழித்திருந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு செய்கின்றனர்.

நாட்டின் பல்வேறு நகரங்களின் பக்தர்கள் ஏராளமானோர் ராமநாதசுவாமி யை இன்று அதிகாலையில் இருந்து வழிபட்டு வருகின்றனர். நாளை தேரோட்டமும், பிப்.20 அமாவாசை நாளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE