சிறகை விரி உலகை அறி - 88: தடுமாற்றம் இல்லாத வாழ்க்கை ஏது?

By சூ.ம.ஜெயசீலன்

கிழிந்த இலைகளுக்குள் நுழையும் ஒளி, விரிந்த கால் விரல்களுக்குள் பரவும் நீர், விழித்த விழிகளை நிரப்பும் இருள் - நம் களைப்பு போக்கும் அருமருந்துகள். வாழ்ந்தவர்களது வார்த்தைகள், வீழ்ந்து எழுந்தவர்களது அனுபவங்கள், மனம்நிறை கவனத்துடன் (Mindfulness) வாழ்கிறவர்களது அறிமுகங்கள் - நம்மை வழிநடத்தும் அற்புதங்கள். அருமருந்து அருந்தவும், அற்புதங்களைக் காணவும் சுற்றுலாக்கள் உதவுகின்றன.

கால் போன போக்கில்

ஏகாதிபத்திய போர் அருங்காட்சியகம் (Imperial War Museum) செல்வது என் அடுத்த திட்டம். இங்கு கட்டணமின்றி பார்க்கலாம். என் திறன்பேசியில் இணைய வசதி இல்லை. இணையம் இல்லாமலேயே ஆஃப்லைனில் இயங்கும், லண்டன் நகர வரைபடத்தை தரவிறக்கம் செய்திருந்தேன். வந்த வழியாகவே பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்று காட்டியது. குழம்பினேன். தயங்கினேன். ஏனென்றால், முந்தைய நாள் இரவு, அருகலை உதவியுடன் கூகுள் வரைபடத்தில் தேடியபோது, நைட்டிங்கேல் அருங்காட்சியகத்திலிருந்து நேரே 10 நிமிடம் நடந்தால் போதும் என காட்டியது. இப்போது, கூகுள் வரைபடமும் இயங்காது. என்ன செய்வது? யோசித்தேன். ஆஃப்லைன் வரைபடத்தைப் பின்பற்றி நடந்தேன்.

பாலத்தில் ஏறும்போதே, கிறிஸ்தவ மதம் சார் பத்திரிகை கொடுத்துக் கொண்டிருந்தவர்களை மறுபடியும் பார்த்தேன். புன்னகைத்தேன். எனக்கொரு பத்திரிகை நீட்டினார்கள். காலையில் அவர்கள் கொடுத்ததை எடுத்துக் காட்டினேன். புன்னகைத்தார்கள். வருடிய காற்றில் வாடாத அவர்களுக்கு நன்றியுரைத்தேன்.

சூரியத் தழுவலில் வெட்கப்பட்டு ஓடிய தேம்ஸ் நதி பாலத்துத் தூண்களில் மோதி வலியில் ஆர்ப்பரித்தது. சுவர்களில் சாய்ந்து அலைகளின் ஊடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பயணிகள். நானும் சாய்ந்தேன். வரிவரியாய் அலைகள். பார்த்த கண்கள் அனைத்தும் அதில் தனக்கானக் கவிதையை எழுதின. படகுகள் எழுதிச் சென்ற பாடல்களை சில விழிகள் வாசித்தன. அலைகளைக் கடந்த மேகங்கள் சற்றுத் தயங்கியே நகர்ந்தன.

தொலைபேசி கூண்டு

தொலைபேசி கூண்டு

குளிர்ந்த காற்றில் புதிய ராகத்தில் ஏதேதோ வார்த்தைகளுடன் பாடலொன்றை முணுமுணுத்தபடி பாலத்தைக் கடந்தேன். இடதுபுறம், வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை இருந்தது. வரைபடம் காட்டிய வழியில் நேரே சென்றேன். லண்டன் மாநகரத்தின் அடையாளங்களுள் ஒன்றான சிவப்பு நிற தொலைபேசி கூண்டுகளைப் பார்த்தேன். ரெட் கியாஸ்க் (Red Kiosks) எனவும் அழைக்கப்படுகிறது. இக்கூண்டுகளை வடிவமைத்தவர் சர் கில்ஸ் கில்பர்ட் ஸ்கோட் (Sir Giles Gilbert Scott). 1990களின் மத்தியில், 1 லட்சத்துக்கும் அதிகமான கூண்டுகள் இருந்துள்ளன.

இதன் தேவை, திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு மிகவும் குறைந்துவிட்டது. ஆனாலும், தற்போதும் 20 ஆயிரம் கூண்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. வருடத்துக்கு 50 லட்சம் அழைப்புகள் செய்யப்படுவதாக லண்டன் தொலைத் தொடர்பு அலுவலகம் (Ofcom) குறிப்பிடுகிறது. பயன்பாடற்று தொலைத் தொடர்பு அலுவலகத்தில் துருப்பிடித்து நின்ற பெட்டிகளை சிலர் வாங்கியுள்ளார்கள். அதில், திறன்பேசி பழுது நீக்குதல், தேநீர், புத்தகம், ஸ்டேசனரி உள்ளிட்ட பல்வேறு கடைகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

சுற்றுலா பயணிகள் பலரும் தொலைபேசி கூண்டுக்குள் நின்று யாருடனோ பேசுவதுபோல படம் எடுத்தார்கள். நானும் சென்றேன். அதன் வாசம் எனக்கு பள்ளி நாட்களை நினைவூட்டியது. கிராமத்தில் தொலைபேசி கடை ஒன்று இருந்தது. பேசுவது வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக கூண்டு வைத்திருந்தார்கள். ஆனால், பேசுவது எல்லாமே வெளியில் கேட்கும். பலரது வியர்வையும் எச்சிலும், கவலையும், கண்ணீரும், சோகமும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு வாசம் கூண்டுக்குள் எப்போதும் இருக்கும். நினைவுகளுடன் படமெடுத்தேன். நினைவுகளைச் சேகரித்தேன்.

சர்ச்சில் போர் கூடத்தின் முகப்பு

அலைவார் அவரே அடைவார்

கற்பனை செய்யுங்கள்! 200 மீட்டர் நீளம், 100 மீட்டர் அகலம் உள்ள செவ்வக வடிவிலான கட்டிடம். வரைபடத்தைப் பின்தொடர்ந்து, 200 மீட்டர் நடந்து, வலது பக்கம் திரும்பி 100 மீட்டர் நடந்தேன். மறுபடியும் வலது பக்கம் திரும்பி டவுனிங் சாலையில் (Downing Street) 100 மீட்டர் நடந்தேன். வாவ்! இடம் வந்துவிட்டது என்கிற மகிழ்சியில் பெயர் பலகையைப் பார்த்தேன், சர்ச்சில் போர்க் கூடம் (Churchill War Rooms) என்றிருந்தது. இங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

தவறான இடத்துக்கு வரைபடம் அழைத்துச் சென்றுவிட்டது. அருகில் ஒருவரை விசாரித்தேன். வந்த வழியே போகுமாறு சொன்னார். நேரே 100 மீட்டர், இடது பக்கம் 100 மீட்டர், மறுபடியும் இடது பக்கம் திரும்பி 200 மீட்டர் நடந்தேன். குழப்பம் வந்தபோது விசாரித்தேன். இன்னொருவர் காட்டிய வழியில் நடந்தேன். அட கொடுமையே! சுற்றி மறுபடியும் சர்ச்சில் போர்க் கூடமே சென்றேன். அடுத்து ஒருவரிடம் விசாரித்தேன். பாலம் கடந்து செல்ல வேண்டும் என்றார். அவர் சொன்னதுதான் சரி. ஏறக்குறைய 400 மீட்டருக்கு மேல் நடந்து, பாலம் கடந்தேன். வழி தெரியாததால் காவலர் ஒருவரிடம் விசாரித்தேன். வந்த வழியிலேயே திருப்பி அனுப்பினார். அவர் சொன்ன வலது, இடது அனைத்தையும் பின்பற்றி நடந்தேன். ஷ்ஷ்ஷ்….அடடா!. ஹாஹா!! சர்ச்சில் போர்க் கூடத்துக்கே திரும்பவும் சென்று சேர்ந்தேன். வருத்தம் ஏதும் எனக்கு இல்லை. அலைச்சலை நினைத்து சிரிப்புதான் வந்தது. தனிப் பயணிக்கே கிடைக்கும் அற்புத அனுபவம் இது.

சர்ச்சில் போர் கூடம்!

ஏகாதிபத்திய போர் அருங்காட்சியகம்

நான் விசாரித்த யாருக்குமே, ஏகாதிபத்திய போர் அருங்காட்சியகம் பற்றி தெரியவில்லை. அது, முதல் உலகப் போர் குறித்த அருங்காட்சியகம். அதைக் கட்டுவதற்கு 1917-இல் பரிந்துரைத்தவர் சர் ஆல்பிரட் மோன்ட். முதல் இயக்குநராக சர் மார்ட்டின் கொன்வே பொறுப்பேற்றார். “முதல் உலகப் போரில் பங்கேற்ற ஒவ்வொரு தனிநபரும், ஆண், பெண், போர் வீரர், மாலுமி, விமானப்படை வீரர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் தியாகத்தை அல்லது செய்த வேலையை இங்கு பார்க்க வேண்டும். ‘இதை நான் செய்தேன்’ என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இதை உருவாக்க வேண்டும்” என்றார். போர் நடந்துகொண்டிருந்தபோதே பிரான்ஸ் சென்ற மார்டின், போர் குறித்து நிறைய சேகரித்தார். 1920-இல் ஏகாதிபத்திய போர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

சர்ச்சில் போர் கூடம்

சர்ச்சில் போர் கூடம்

4-வது முறையாக தேடிச் செல்லாமல், கண் எதிரே இருந்த சர்ச்சில் போர் கூடத்துக்குச் சென்றேன். 1938-இல் ஐரோப்பாவில், 2-ஆம் உலகப் போர் மேகம் சூழத் தொடங்கியபோது, அரசு மற்றும் இராணுவத்தின் இதயமாக, ஒருங்கிணைந்த அவசரகால தலைமையகமாக (Central Emergency Headquarters) இவ்விடத்தை, பிரிட்டன் தேர்வு செய்தது. பாராளுமன்றத்துக்கு அருகில் இருந்த இந்த பாதாளக் கூடத்தில்தான் அடுத்த 6 ஆண்டுகளுக்கு (1939- 1945) நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், வீரர்கள் மற்றும் சீருடையற்ற பணியாளர்கள் மிகவும் மதிப்பு மிகுந்த தங்களின் ஆயிரக்கணக்கான மணி நேரங்களை செலவிட்டார்கள். முழுமையாக இங்கேயே அதிகாரிகள் சிலர் தங்கியிருந்தார்கள். அருகில் இருந்த அலுவலகங்களில் வேலை செய்துகொண்டு, குண்டு விழப் போகும் நேரங்களில் மட்டும் பாதுகாப்புக்காக சிலர் உள்ளே வந்து சென்றார்கள்.

வின்சென்ட் சர்ச்சில்

தலைமைக்கு ஓர் உதாரணம்

1940, மே மாதம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வின்சென்ட் சர்ச்சில், “இந்த அறையிலிருந்தே நான் போரை நடத்துவேன்” என்றார். தொடக்கத்தில், இங்கு தங்கியிருப்பதை சர்ச்சில் விரும்பவில்லை. தைரியமான தலைவராக, நிலத்தின் மேல் இருந்தபடியே போர் செய்யத்தான் விரும்பினார். ஆனால், குண்டு மழை பொழிந்த செப்டம்பர் 1940 முதல் மே 1941 வரை; வீ- வெப்பன் எனப்படும், பழிவாங்கும் ஆயுதம் (V-Weapon – Vengeance Weapon) குண்டு வீசிய ஜுன் 1944 முதல் மார்ச் 1945 வரை இந்த இடம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக, வான் வெளி தாக்குதலால் 1940, அக்டோபர் மாதம் டவுனிங் சாலை தாக்கப்பட்டபோது, ஏறக்குறைய அனுதினமும் இக்கூடத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார் சர்ச்சில். ஆச்சர்யம் என்னவென்றால், இக்கூடமும் இதற்கு மேல் உள்ள கட்டிடமும் குண்டு வீச்சில் ஒருபோதும் பாதிக்கப்படவே இல்லை.

அமைச்சர்கள்

போர்க்கால அமைச்சரவை அறை

நுழைவுச் சீட்டு வாங்கினேன். அருங்காட்சியகத்தின் அரங்குகளைப் பார்க்கும்போது கேட்டு அறிந்துகொள்ள, குரல் பதிவு செய்யப்பட்ட கருவியைக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கூடத்தின் முகப்பிலும் எண் இருந்தது. அதை இக்கருவியில் அழுத்தினேன். அந்தந்த அரங்கு குறித்த தகவலைக் கேட்டறிந்தேன்.

முதலில், போர்க்கால அமைச்சரவையின் அறையைப் (War Cabinet Room) பார்த்தேன். 1940, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் இங்குதான் நடந்தன. குளிர் காலம் மற்றும் இலையுதிர் கால பாதுகாப்பு குழு கூட்டங்கள் இங்கு நடந்துள்ளன. அமைச்சரவையில் 8 உறுப்பினர்களுக்கு மேல் இருந்ததில்லை. கட்சி வேறுபாடின்றி, லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சியில் இருந்தும், கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் மரபுத்துவக் கட்சியில் இருந்தும் அதிகாரிகளைத் தேர்வு செய்திருந்தார் சர்ச்சில். அவரது தலைமைத்துவத்துக்கு இது ஓர் உதாரணம்.

அமைச்சரவை அறை

1940, அக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அமைச்சரவையின் அறை எப்படி இருந்ததோ, அப்படியே தத்ரூபமாக செய்திருக்கிறார்கள். பார்த்துக்கொண்டே நடக்கிறேன்.

(பாதை விரியும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE