சென்னை: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்காததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க போவதில்லை என தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அந்த கூட்டத்தில் இன்று பங்கேற்றார். ஆனால் கூட்டத்திலிருந்து சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்த மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசும்போது, ”கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி இருக்கிறேன். ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுவுக்கு பேச 20 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் பேச 10 முதல் 12 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடங்கள் முடிவில் நேரம் முடிந்து விட்டதாக கூறி நான் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் ஒருவர் மட்டுமே இங்கு பங்கேற்று இருக்கிறேன். கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தேன்.
இந்த பட்ஜெட் அரசியல் சார்பு உடையதாக இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்றுதான் நான் கேள்வி எழுப்புகிறேன். நிதி ஆயோக்கிற்கு எந்தவிதமான பொருளாதார அதிகாரங்களும் இல்லாத நிலையில் அது எவ்வாறு வேலை செய்யும்? ஒன்று அதற்கு பொருளாதார அதிகாரங்களை வழங்குங்கள். அல்லது மீண்டும் திட்டக் கமிஷனை கொண்டு வாருங்கள்.” என்றார்.
» சாவர்க்கரால் கிளம்பிய சர்ச்சை: மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா
» கர்நாடகா ஷிரூர் நிலச்சரிவுக்குக் காரணம் இதுதான்: இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை
இதனிடையே முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பேசுவதற்கு போதுமான வாய்ப்பு வழங்காததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ள அவர், ‘இதுதான் கூட்டாட்சியா? இதுதான் ஒரு மாநில முதலமைச்சரை கையாளும் விதமா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதி என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களை நசுக்கும் வகையில் செயல்படக்கூடாது. கூட்டாட்சி தத்துவம் என்பது அனைவரது குரல்களுக்குமான சம வாய்ப்பு வழங்குவது என்பதை உணர வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.