கர்நாடகா ஷிரூர் நிலச்சரிவுக்குக் காரணம் இதுதான்: இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை

By KU BUREAU

அங்கோலா: ஷிரூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்ஹெச்ஏஐ) அறிவியல் பூர்வமற்ற பணியே காரணம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இது தடுக்க முடியாத இயற்கை பேரிடர் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவில் உள்ள ஷிரூர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சிலரது உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலமைச்சர் சித்தராமையா நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் , உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிலச்சரிவில் காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அர்ஜுன் உட்பட மேலும் மூவரைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், மராட்டிய லைட் இன்பேன்ட்ரி ரெஜிமென்ட் மற்றும் ராணுவ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஷிரூர் பகுதியில் நிலச்சரிவு குறித்து ஆய்வு செய்த இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) முதற்கட்ட அறிக்கையை கர்நாடகா அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷிரூர் பகுதியில் குறுகிய காலத்தில் 503 மி.மீ மழை பெய்ததே இச்சம்பவத்திற்கு காரணம் என்று புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனாலும், நிலச்சரிவுக்கான முக்கிய காரணம் மழைநீர் ஓட்டத்திற்கு இயற்கையான தடைகள்தான் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் சாய்வான பகுதி மற்றும் இடதுபுறம் கட்டமைப்பு ரீதியாக சிதைந்துள்ளது. மேலும் நிலச்சரிவுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்ஹெச்ஏஐ) அறிவியல் பூர்வமற்ற பணியே காரணம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இது தடுக்க முடியாத இயற்கை பேரிடர் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE