கடற்கரைகளில் மது அருந்தியவர்களிடம் ரூ.4.4 லட்சம் அபராதம் வசூல்: கோவா அரசு அதிரடி

By KU BUREAU

பாஞ்சிம்: கோவா மாநில கடற்கரைகளில் மது அருந்தியதற்காக 222 சுற்றுலாப் பயணிகளிடம் 4.4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கோவா மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதமான காலச்சூழல், அழகான கடற்கரைகள் என கோவா மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசிக்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவா மாநில கடற்கரைகளில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு பெண்களிடம் அத்து மீறும் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்கள் அந்த பாட்டில்களை கடற்கரையிலேயே வீசி செல்வதால் பிற சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனிடையே கடந்த 2023-24ம் ஆண்டுகளில் கோவா கடற்கரையில் மது அருந்தியவர்களிடமிருந்து 4.4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் குந்தே தெரிவித்துள்ளார். 222 சுற்றுலாப் பயணிகளிடம் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவா மாநில அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி கடற்கரையில் மது அருந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE