தங்கத்தின் விலை 44 ஆயிரம் ரூபாயை நெருங்கியது: வெள்ளியின் விலையும் உச்சம் தொட்டது!

By காமதேனு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்தது. தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,450 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 5,475 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 43,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து 5,973 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று காலையில் தங்கம் கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் மாலையில் கிராமுக்கு 77 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. அதேபோல வெள்ளியின் விலையும் நேற்று மாலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்தது.

தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று கடும் உயர்வினை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து 77.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,300 ரூபாய் உயர்ந்து 77,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE