கொலை, கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பெண் எஸ்.ஐ சுட்டு கைது செய்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்ஹான் ஷேக். இவர் மீது கேஷ்வாபூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஃப்ர்ஹான் ஷேக் காமனகட்டி சாலையில் உள்ள தரிஹாலா கிராஸ் அருகே பதுங்கியிருப்பதாக கேஷ்வாபூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் நிலைய பெண் எஸ்.ஐ கவிதா தலைமையிலான போலீஸார், குற்றவாளி ஃபர்ஹான் ஷேக் பதுங்கியிருந்த இடத்தை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது திடீரென போலீஸ்காரர்கள் சுஜாதா, மகேஷ் ஆகியோர் மீது ஃபர்ஹான் ஷேக் கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். அப்போது எஸ்.ஐ கவிதா தன்னிடமிருந்து துப்பாக்கியால் ஃபர்ஹான் ஷேக் மீது சுட்டார். இதில் காலில் குண்டு காயமடைந்த ஃபர்ஹானை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் ஃபர்ஹான் ஷேக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இந்த சம்பவம் தொடர்பாக ஃபர்ஹான் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவு குற்றவாளியை பெண் எஸ்.ஐ சுட்டுப் பிடித்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
» கர்நாடகாவில் 7 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 60 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
» பெண் பத்திரிகையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: அதிர்ச்சி வீடியோ!