கர்நாடகாவில் 7 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 60 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

By KU BUREAU

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெலகாவி மாவட்டத்தில் ஏழு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 30 இணைப்பு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மாவட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெலகாவி மாவட்டத்தில் ஏழு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் 30 இணைப்பு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருளில் தவித்து வருகின்றன.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள கட்டபிரபா ஆற்றின் நீர்வரத்து நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. தற்போது ஆற்றில் நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். சிக்கோடி உட்கோட்டத்தில் 87 கிராமங்களும், பெலகாவியில் 35 கிராமங்களும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகாவில் உள்ள ஹுன்னராகி கிராமத்தில் துத்கங்கா ஆறு ஓடுகிறது. அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்தோடும் இந்த ஆற்று நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் ஊரை காலி செய்து கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். நேற்றிரவு முழுவதும் தூங்காமல் இருந்த எல்லையோர மாவட்ட மக்கள், இன்று ஹுன்னராகி கிராமத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு, ஊருக்கு வெளியே உள்ள பள்ளிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதே போல மார்கண்டேயா நதி அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதால், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டம் கோகாகா நகருடன் இணைக்கப்பட்டுள்ள சிக்கோலி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மறுபுறம் ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE