அதிக விலைக்கு குதிரைவாலி: தேசிய வேளாண் சந்தையால் லாபம் ஈட்டிய விவசாயி

By முருகன்.ர

மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் குதிரைவாலி பயிரை அதிக விலைக்கு விற்று விவசாயி ஒருவர் லாபம் அடைந்துள்ளார்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்தவொரு இடைத்தரகர் இன்றி, மறைமுக ஏலம் மூலம் அதிக விலைக்கு விற்று பயனடையலாம். தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் விளைபொருட்களை மின்னணு பரிவர்த்தனை செய்யும் பொருட்டு வெளியூர், வெளிமாநிலங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் அதிக லாபம் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

இதன்படி, ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குதிரைவாலி பயிரை இ-நாம் மூலம் அதிகபட்சம் கிலோ ரூ.47 வீதம் 1,830 கிலோ விற்று புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவீந்திரன் பயனடைந்தார். இதன் மதிப்பு ரூ.86 ஆயிரம் ஆகும். இதனால் இவருக்கு கிலோவிற்கு ரூ. 7 வீதம் அதிக லாபம் கிடைத்தது.

ரவீந்திரன் கூறுகையில், ”எனது வயலில் குதிரை வாலி பயிரிட்டேன். பயிர் நன்றாக விளைந்திந்தாலும் அறுவடை காலங்களில் அறுவடை இயந்திரம் கிடைக்கவில்லை. வேளாண்துறை அரசு அதிகாரிகள் ஆலோசனையின்படி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுடன் பயிர் அறுவடை செய்தேன். இதனால் 13 நாட்களுக்கு விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. குதிரை வாலி பயிரை கிலோ ரூ.45க்கு கமிஷன் கடை மூலம் விலை தருவதாக கூறினார்கள். ஆனால் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கிலோ ரூ.47க்கு கிடைத்தது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE