சாதி, மதம், உடை உள்ளிட்டவைகளில் பாரபட்சம் காட்டினால் மால்களில் உள்ள அனைத்து கடைகளின் வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் வேட்டி அணிந்ததாகக் கூறி வயதான விவசாயிக்கு ஜிடி வேர்ல்ட் மால் அனுமதி மறுத்தது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மால், ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள மால்களுக்கு மாநகராட்சி புதிய விதியை உருவாக்க உள்ளளது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவின் படி சில விதிகளை பெங்களூரு மாநகராட்சி தயார் செய்து வருகிறது. குறிப்பாக, சாதி, மதம் பாகுபாடு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
தற்போது பெங்களூருவில் உள்ள பெரும்பாலான மால்களில் ஊழியர்களின் நடத்தையில் மாற்றம் இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. மேலும், ஜிடி வேர்ல்ட் மாலில் நடந்த சம்பவம் மால்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தியது. இதையெல்லாம் கண்டு எச்சரித்த மாநகராட்சி தற்போது புதிய விதியை வகுக்க உள்ளது. மேலும் பாரபட்சம் காட்டினால் அந்த மால்களில் உள்ள அனைத்து கடைகளின் வர்த்தக உரிமத்தையும் ரத்து செய்ய தயாராக உள்ள மாநகராட்சி, விரைவில் உத்தரவு பிறப்பிக்க தயாராகி வருகிறது என்று பிபிஎம்பி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி அமல்படுத்தவிருக்கும் விதிமுறைகளில், யாரையும் மாலில் நுழைய அனுமதிக்க வேண்டும், அவ்வப்போது சொத்து வரி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒருவரின் கவுரவத்தை யாரும் பாதிக்கக் கூடாது. இந்த விதி மீறப்பட்டால், இதுபோன்ற வணிக வளாகங்களின் வியாபாரத்தை நிறுத்த திட்டம் வகுக்கப்படுகிறது. பொதுவாக, மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை உடை, செல்வச் செழிப்பு என்ற பெயரில் பாகுபாடு காட்டும் சில மால்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறது. தற்போது, மாநகராட்சியின் உத்தரவை தலைநகரில் உள்ள வணிக வளாகங்கள் கடைபிடிக்க தயாராகி வருகின்றன.
» சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்
» நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க ஓபிஎஸ் வலியுறுத்தல்