நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி முதல்வர்கள்: மம்தாவின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு

By KU BUREAU

கொல்கத்தா: வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று புதுடெல்லி புறப்படவிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதை தொடர்ந்து, வரும் 27ம் தேதி டெல்லியில் நடைபெறவிருந்த நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர். இதேபோல், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இச்சூழலில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டெல்லி புறப்படுவதாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், “முதல்வர் இன்று மதியம் புதுடெல்லிக்கு செல்லமாட்டார். இதற்கு அவர் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை" என்றனர். மேலும், முதல்வரின் டெல்லி பயணம் நாளை இருக்குமா என கேட்டதற்கு, “அது நாளைதான் தெரியவரும்" என்றனர். தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE