ஜூனியர் மாணவர்களை விடுதியில் அடித்து உதைத்து ராகிங் கொடுமை: அதிர்ச்சி வீடியோ

By KU BUREAU

பால்நாடு: ஆந்திர பிரதேசத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர்களை விடுதிக்கு அழைத்து வந்து, இறுதி ஆண்டு மாணவர்கள் கம்புகளால் அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் ராகிங் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் இந்த ராகிங் பழக்கத்தை முழுமையாக விட்டொழிக்காமல் தங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிலும் மாணவர்களை ராகிங் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் உள்ள நர்சராவ்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும், எஸ்.எஸ்.என் என்ற கல்லூரியில் பயிலும் மாணவர்களின் ராகிங் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் விடுதிக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களை அழைத்து வந்த இறுதி ஆண்டு மாணவர்கள், அவர்களை என்சிசி பயிற்சி எனக் கூறி கம்புகளைக் கொண்டு அடித்து உதைத்து ராகிங் செய்துள்ளனர். அவர்களை முழங்காலிட வைத்து, கம்புகளைக் கொண்டு அடித்துள்ளனர். இதனை அறையில் இருந்த மற்றொரு மாணவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, கல்லூரிக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வீடியோ காட்சிகள் பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதும், இறுதியாண்டு மாணவர்கள் கல்வியை முடித்துவிட்டு வெளியேறிய நிலையில், வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்கள் இறுதி ஆண்டுக்கு முன்னேறி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராகிங் செய்த மாணவர் ஒருவரை கைது செய்துள்ள போலீஸார் மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்திற்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு, மாநில அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கு இதுவே சாட்சி என கண்டனம் தெரிவித்துள்ளது. சாலையின் நடுவே வைத்து ஒருவரை கொலை செய்த போதும், அதை தடுக்கத் தவறிய காவல்துறை, இதுபோன்று மாணவர்கள் தாக்கப்படுவதையும் தடுக்க முடியாமல் கைகட்டி இருப்பதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE