திண்டுக்கல் சிறுமலை சாலையில் மாடு குறுக்கிட்டதால் பஸ் கவிழ்ந்து பயணிகள் காயமடைந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த காலங்களில் மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு இருந்தது. மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை பனியின் தாக்கமிருந்தது.
நடப்பாண்டில் கார்த்திகை முதல் வாரத்தில் தொடங்கிய பனிப்பொழிவு மதியம் 2 மணி ஆகியும் கூட அதன் தாக்கம் குறைந்த பாடில்லை. பனிக்கண் திறப்பு நீடித்ததால் நடப்பாண்டு மழைப்பொழிவும் குறைந்தது. தற்போது நிலவியுள்ள பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால், சாலைகளில் எதிரெதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணிக்கும் நிலை தொடர்கிறது.
இதனால், பனி மூட்டம் நிறைந்த பகுதிகளின் குறுகிய சாலைகளில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. வளைந்து நெளிந்து செல்லும் மலை சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் கவனமாக பயணிக்க நெஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
பனி மேட்டத்திற்கு இடையே, திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை சாலையில் அரசு பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே காட்டுமாடு குறுக்கிட்டதால் பஸ்சை டிரைவர் நிறுத்த முயன்றார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் பயணிகள் அலறினர். இதில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அரசு பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த பயணிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.