வெள்ள அபாயம்: உலகப்புகழ் பெற்ற பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல தடை

By KU BUREAU

கேஆர்எஸ் நீர்தேக்கத்தில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உலகப்புகழ் பெற்ற ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது. மைசூர் அருகே அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயம் கர்நாடகா மாநிலத்தில் மிகப்பெரியது. காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆறு சிறிய தீவுகளை உள்ளடக்கியது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்

குடகு மாவட்டம் உள்ளிட்ட காவிரிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பழைய மைசூரு பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமான கேஆர்எஸ் நீர்த்தேக்கம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ரங்கனதிட்டில் உள்ள படகுத்துறை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் பறவைகளின் கூடாரங்களும் ஓரளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் தண்ணீர் அதிகரித்தால் நடைபாதையில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பறவைகள் சரணாலய ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை கேட் அருகே நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஏழு ஆறுகள் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் மாவட்டத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கட்டபிரபா நீர்த்தேக்கத்தில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோகாக், மூட்லேகி, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE