உன்னாவ்: உத்தரபிரதேசத்தில் செய்தியாளரை ஒருவரை பெண் வழக்கறிஞர் ஒருவர் செருப்பால் அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 22ம் தேதி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் வாலிபர் ஒருவரை தனது காலணியால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த வாலிபர் அப்பெண்ணிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போதும், அவரது உடலின் மீது அமர்ந்து அந்த பெண் தொடர்ந்து செருப்பால் தாக்கும் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து இருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் வழக்கறிஞர் ஒருவரை செய்தியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த செய்தியாளரை பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிதான் இது என தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளாகும் செய்தியாளரின் பெயர் மனு அவஸ்தி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவுக்கு பலதரப்பட்ட கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகிறது. பலரும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தேவை என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், சிலர் சட்டத்தின்படியே யாரையும் தண்டிக்க வேண்டும் எனவும், இது போன்ற வன்முறை கூடாது எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
» ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நூலிழையில் போலீஸாரிடமிருந்து தப்பியோடிய ரவுடி சீசிங் ராஜா
» கூடங்குளத்தில் கதிரியக்க அவசரநிலை முன்னேற்பாடுகள் குறித்த பேரிடர் ஒத்திகை பயிற்சி!