ஐஐடி-யில் இடம் கிடைத்தும் நிதி பிரச்சினையால் ஆடு மேய்த்த பழங்குடியின மாணவி: முதல்வர் உதவிக்கரம்

By KU BUREAU

ஹைதராபாத்: பாட்னாவில் உள்ள ஐஐடியில் இடம் கிடைத்தும் நிதிப் பிரச்சினையால் ஆடு மேய்த்து வந்த பழங்குடியின மாணவிக்கு, நிதியுதவி வழங்க தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ராஜாண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் படாவத் மதுலதா. இவர் இந்த ஆண்டு ஜேஇஇ- தேர்வில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் 824வது தரவரிசை பெற்று ஐஐடி பாட்னாவில் படிப்பதற்கு தேர்வாகியுள்ளார். இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக, பொறியியல் இயற்பியலில் பி.டெக் படிப்பை தொடர, கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2.5 லட்சம் தொகையை இம்மாணவியின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.

விவசாய கூலித் தொழிலாளியின் மகளான படாவத் மதுலதா, கடந்த மாதம் ரூ.17,500 மட்டுமே செலுத்தி சேர்க்கையை உறுதி செய்தார். எனினும், ஏழ்மையில் உள்ள அம்மாணவியின் குடும்பத்தினரால் கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக, மேலும் தேவையான ரூ.2.51 லட்சத்தை ஏற்பாடு செய்ய இயலவில்லை. இந்நிலையில் மாணவியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தனது குடும்பத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாணவி படாவத் மதுலதா, கிராமத்தில் ஆடு மேய்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாணவி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியினர் நல ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் வரும் 27ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால், இம்மாணவிக்கு உதவுமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையே இதுகுறித்த தகவல் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிரமமான குடும்ப சூழ்நிலையில் ஐஐடியில் இடம்பெற்ற மாணவி மதுலதாவுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார். அவரது கல்வியைத் தொடரத் தேவையான தொகையை, பழங்குடியினர் நலத்துறை வழங்கியுள்ளது என முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி, தெலங்கானாவுக்கு விருதுகளை கொண்டு வர வேண்டும் என மாணவிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE