ஏவுகணை சோதனை: ஒடிசா கடற்கரை கிராமங்களில் இருந்து 10,000 பேர் தற்காலிக இடமாற்றம்

By KU BUREAU

புவனேஸ்வர்: ஏவுகணை சோதனை காரணமாக ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் ஒருங்கிணைந்த சோதனை எல்லைக்கு (ஐடிஆர்) அருகிலுள்ள கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிகமாக இடமாற்றப்பட்டனர்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய புதிய ஏவுகணை அமைப்பின் சோதனை ஒடிசா மாநிலம், பாலசோர் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி சோதனை நடைபெற உள்ள ஐடிஆர் ஏவுதள வளாகம் 3-ன் 3.5 கி.மீ. சுற்றளவு பகுதியில் வசிக்கும் குழந்தைகள் உட்பட 10,581 பேர் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுடன் தற்காலிக முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டனர்.

பர்தன்பூரில் இருந்து 2,127 பேர், ஜெயதேவ்கசபாவில் இருந்து 2,725 பேர், சகஜா நகரில் இருந்து 477 பேர் பர்தன்பூர் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் பீம்பூரிலிருந்து 1,823 பேரும், சச்சினாவிலிருந்து 479 பேரும், டோமுஹான்பதானைச் சேர்ந்த 41 பேரும் பீம்பூர் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கந்தர்டாவில் இருந்து 391 பேரும், கடுபாஹியில் இருந்து 803 பேரும், துந்தராவில் இருந்து 408 பேரும், குசுமுலியில் இருந்து 1307 பேரும் கலாமதியா பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்காலிகமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீடாக தலா ரூ.300-ம், உணவுக்காக தலா ரூ.100-ம் வழங்கப்படுகிறது. மேலும், கால்நடைகளின் உணவுச் செலவுக்காக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE