நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 வீரர்கள் பாய்ச்சல்!

By முருகன்.ர

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் நாளை நடைபெறவுள்ள, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகை நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இம்மூன்று போட்டிகளிலும் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் பெயர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன. இதன்படி, நாளை தைப்பொங்கல் திருநாளையொட்டி உலகப் புகழ்வாய்ந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. தலா 50 பேர் வீதம் 6 குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு 6 நிறங்களில் சீருடை வழங்கப்படுகிறது. காளைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சான்று, வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று ஆகியவை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்தகுதி சான்று, மருத்துவ பரிசோதனை சரிபார்ப்புக்கு பின்னர், களத்தில் இறங்கி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். களமிறக்கப்படும் காளைகள் மீதான காயம், கொம்புகளின் கூர்மை ஆகியவை முன்னதாக பரிசோதிக்கப்படும்.

பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவனியாபுரம் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போட்டியை காண வருவோரின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காயமடையும் வீரர்கள், காளைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. படுகாயமடையும் வீரர்களை சிகிச்சைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல 12 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இப்போட்டி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு திருப்பரங்குன்றம், விளாச்சேரி கால்நடை மருத்துவமனைகளில் அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE