‘அரசு தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு பலன்’: உயர் நீதிமன்றம் உத்தரவு

By முருகன்.ர

அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல தற்காலிக பெண் உதவி பொறியாளருக்கு, 4 வாரத்தில் மகப்பேறு சலுகைகளை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பொறியாளராக ராஜேஸ்வரி என்பவர் கடந்த 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.

இடையில் கருவுற்ற இவர் மகப்பேறு விடுப்பில் சென்றார். விடுமுறை வழங்கிய போக்குவரத்துக்கழகம், நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி, மகப்பேறு சலுகை உள்ளிட்ட பலன்களை வழங்க மறுத்தது.

இது தொடர்பாக ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்தார். பேறு கால பலன்களை 4 வாரத்தில் வழங்க வேண்டும் என அப்போது அவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

’மகப்பேறு என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு, பிரசவிக்கும் பெண்ணுக்கு 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதைப் போன்ற வேதனை ஏற்படும், இதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என வலியுறுத்திய நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ‘மத்திய, மாநில அரசுகள் பெண்களின் மேம்பாட்டுக்காக கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை கட்டுப்பாடு இல்லாமல் அமல்படுத்த வேண்டும். சாதாரண காரணங்கள் அத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடையாக இருக்கக் கூடாது. கணவர் குடும்பத்துக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்கள், கடவுளுக்கு சமமாக மதிக்கப்பட வேண்டும்’ எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், போக்குவரத்துக் கழகத்தின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ’ராஜேஸ்வரிக்கான மகப்பேறு பலன்களை 4 வாரத்தில் வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE