இரத்தசோகையை துரத்த வேண்டுமா?: அன்றாட உணவுகளின் மூலமே அது சாத்தியம்!

By மருத்துவர் யோ.தீபா

இயற்கையின் அங்கமாகிய நாம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதே சிறப்பு. வாழ்வியல் சார்ந்த உடல்நலக் கோளாறுகள் பலவற்றுக்கும் இயற்கையான வழிமுறைகளில் தீர்வு காண்பதும் நல்லது.

ஏதேனும் உடல்நல பாதிப்பு எழுந்த பிறகே மருத்துவமனைக்கு ஓடுவது பெரும்பாலானவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சத்தானவற்றை முறையாக சேர்த்துக்கொண்டாலே, வருமுன் காக்கலாம்! உடலில் குறிப்பிட்ட சத்துப் பற்றாக்குறை எழுந்தாலும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவும் முழு ஆரோக்கியம் பெறலாம். அப்படியானவற்றை இந்த இயற்கை மருத்துவத் தொடரில் அலசப் போகிறோம்.

முதலாவதாக, இரத்தசோகை குறித்து பார்ப்போம்.

இரத்த சோகை என்பது உடலில் ஆரோக்கியமான இரத்த அணுக்கள் இல்லாததால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்திருப்பதை தெரிவிப்பதாகும்.

இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் முதன்மை புரதம் ஹீமோகுளோபின். இது இரத்த ஓட்டத்தின் மூலம் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்குகிறது. இரத்தத்தின் ஹீமோகுளோபின் குறைபாடு என்பது, உங்கள் இரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்க முடியாததைக் குறிக்கிறது. இதுவே இறுதியில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

இரத்தசோகையை துரத்தும் உணவுத்திட்டம்

இரத்த சோகை போக்குவதற்கான உணவுத் திட்டத்தை உருவாக்கும் போது கீழே உள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

1. வைட்டமின் சி உள்ள இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் தக்காளி போன்ற உணவுகள் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.

2. பாதாம், பீட்ரூட் மற்றும் சிவப்பு மிளகு போன்ற உணவுகள் உட்பட பீட்டா கரோட்டின் கொண்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

3. உண்பது சைவமோ, அசைவமோ இரும்புச் சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

4. உடலில் சேரும் இரும்புச் சத்தின் பயன்பாடு முழுமையாக அமைய ஃபோலிக் அமிலம் உதவுகிறது. இந்த ஃபோலிக் அமிலத்தை செயற்கையான மருந்து, மாத்திரைகள் வாயிலாகவே நாம் பெற வேண்டியிருக்கிறது. மாறாக ஃபோலிக் அமிலத்தின் மூலமான, ’ஃபோலேட்’ அதிகம் செறிந்திருக்கும் கீரைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது அவசியம். பசலை மற்றும் பாலைக் கீரைகளை சேர்த்துக்கொள்வது ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-12 உடலில் சேர உதவும். குறிப்பாக, கர்ப்பிணிகள் பிறக்கும் குழந்தை குறைபாடின்றி பிறக்க இந்த சத்துக்கள் முக்கியமானதாகும்.

5. இரும்புச் சத்துக்கான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும்போது, இரும்புச் சத்து உறிஞ்சுவதைத் தடுக்கும் உணவுகள் அல்லது பானங்களை தவிர்க்க வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகள், காபி, தேநீர், முட்டை போன்றவை இதில் அடங்கும். வழக்கமான உணவு முடிந்ததும் காபி, டீ குடிக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது. அப்படி அருந்தினால், உணவில் உள்ள இரும்புச் சத்து உடலில் சேராது போய்விடும். எனவே காபி, டீ அருந்துவோர், வழக்கமான உணவுக்கு முன் அல்லது பின், குறைந்தது 2 மணி நேர இடைவெளி விடுவது நல்லது.

இரும்புச்சத்து அதிகரிக்க உதவும் உணவுகள்:

1. இலைகள் மற்றும் கீரைகள்: கீரைகள் அனைத்திலும் இரும்புச்சத்து செறிந்திருக்கிறது. முருங்கைக் கீரை, கோஸ், பசலை போன்றவை முக்கியமானவை. இலைக் காய்கறிகள் உங்களுக்கு சிறப்பான இரும்புச் சத்தை அளிக்கும். அதே வேளையில், அவற்றை மட்டும் சார்ந்து இருப்பது நல்லதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஆரஞ்சு ஜூஸ், சிவப்பு அரிசி போன்ற இதர உணவுகளிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

3. சைவம் மட்டுமே உண்போருக்கு, பீன்ஸ் ரகங்கள் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். கொண்டைக்கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ் போன்றவை இரும்புச்சத்து செறிந்தவை ஆகும்.

4. கொட்டைகள் மற்றும் விதைகள்: தாதுக்கள் நிறைந்த இந்த உணவை நீங்களே உண்ணலாம் அல்லது தயிர் மற்றும் சாலடுகள் போன்றவற்றில் தூவி உண்ணலாம். பூசணி விதைகள், வேர்கடலை போன்றவையும் இதில் அடங்கும்.

5. முருங்கை இலைகள்: முருங்கை இலைகளில் ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த அற்புதமான இலைகளை பரிமாறினால், இதர கீரைகளில் உள்ளதைவிட கூடுதலாக இரும்புச்சத்தினை பெறலாம். முருங்கை இலைகளை தொடர்ந்து சேர்ப்பது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதோடு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் உதவும்.

சுமார் 20 - 25 முருங்கை இலைகளை பொடியாக நறுக்கி பேஸ்ட் செய்து, ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் இரும்புச்சத்து மேம்பட காலை உணவோடு சேர்த்து இதை சூரணமாக சாப்பிடுங்கள்.

6. பீட்ரூட்: பீட்ரூட் என்பதில் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளது. பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டி ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது.

ஒரு மிக்ஸியில் ஒரு கப் நறுக்கிய பீட்ரூட்டைச் சேர்த்து, நன்றாகக் அரைத்து சாற்றை வடிகட்டி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து எடுத்துக்கொள்ளவும். காலைதோறும் தவறாமல் இந்த அற்புதமான சாற்றைக் குடிக்கவும். எலுமிச்சை சாறு வைட்டமின் சி உள்ளடக்கத்தை சேர்க்கிறது மற்றும் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

7. எள் விதைகள்: எள் விதைகளில் இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் பி6, ஃபோலேட் மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. கருப்பு எள் விதைகளை தொடர்ந்து சேர்ப்பது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதோடு இரும்புச்சத்து உறிஞ்சலை ஊக்குவிக்கிறது.

சுமார் 1 தேக்கரண்டி கருப்பு எள் விதைகளை உலர்த்தி, வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து உருண்டையாக உருட்டவும். அனைத்து வயதினரும் உடலின் இரும்புச் சத்து உயர்வுக்கு இந்த சத்தான லட்டுவை தவறாமல் சாப்பிடுங்கள்.

8. பேரீச்சம் பழம் மற்றும் உலர் திராட்சை: இரும்பு, மெக்னீசியம், தாமிரம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் செழுமையுடன் இந்த உலர் பழங்கள் வருகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரும்பு உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும், இந்த உலர் பழங்களை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

3 - 5 பேரீச்சம்பழங்கள் மற்றும் ஒரு தேக்கரண்டி திராட்சையை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடுங்கள். இது உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் மற்றும் இரும்பு அளவை அதிகரிக்க உதவும்.

பச்சை பயிறு கிச்சடி: பச்சை பயிறு கிச்சடி என்பது சகல ஊட்டச்சத்துக்களும் நிரம்பியது. குறிப்பாக இது, உடலின் இரும்புச்சத்து உயர்வுக்கு எளிதான உணவாகும். இந்த ஆரோக்கியமான கிச்சடியில் சரியான அளவு புரதம் மற்றும் உடலுக்கு நலம் பயக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. சுவைக்கு மசாலா கலந்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்: 1 கப் கீரை. நறுக்கப்பட்ட வெங்காயம் -1. நறுக்கிய தக்காளி 2. 1 கப் அரிசி. ½ கப் பாசிப் பருப்பு. 1 தேக்கரண்டி சீரகம். 1 தேக்கரண்டி கடுகு விதைகள். 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள். 1 தேக்கரண்டி மஞ்சள் தூள். 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள். கறிவேப்பிலை. 2 தேக்கரண்டி நெய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். பருப்பை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கிய கீரையைச் சேர்க்கவும்.

இப்போது அரிசி, பருப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

10- 15 நிமிடங்கள் வேகவைத்து இரண்டு விசில் வந்ததும் கிச்சடியை பிரஷர் குக்கரில் இருந்து இறக்கி அதன் மேல் நெய் தடவி சூடாக பரிமாறவும்.

இந்த உணவுகளுக்கு அப்பால், நீர் அருந்த செப்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதும் நல்லது. செப்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரை இயற்கை மருத்துவம் அதிகம் பரிந்துரைக்கிறது. இது இயற்கையான தாதுக்களுடன் உடலை மீட்டெடுக்கவும், இரும்பு அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE