பாஜக தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆம் ஆத்மி அமைச்சருக்கு நீதிமன்றம் ஜாமீன்

By KU BUREAU

புதுடெல்லி: பாஜக தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷிக்கு, ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

ஆம் ஆத்மி மூத்த தலைவரான அதிஷி, டெல்லி நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், கடந்த ஏப்ரல் 2ம் தேதி அன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்லி பாஜக, மிக நெருக்கமான நபர் மூலம் தான் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை அக்கட்சியில் சேர அணுகியதாகவும், இதனை மறுத்தால் இன்னும் சில நாள்களில் அமலாக்கத் துறையால் நான் கைது செய்யப்படுவேன் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த டெல்லி பாஜக தலைவர் பிரவீன் சங்கர் கபூர், இது தொடர்பாக அமைச்சர் அதிஷிக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில் அமைச்சர் அதிஷி, தான் தெரிவித்த குற்றச்சாட்டை உடனடியாக வாபஸ் பெறுமாறும், அவர் மன்னிப்புக் கோருவதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் முக்கியமாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பாஜக தலைவர் பிரவீன் சங்கர் கபூர் சார்பில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் அமைச்சர் அதிஷி நேரில் ஆஜரானார். விசாரணையின்போது, இந்த குற்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாக இருப்பதால்,அமைச்சர் அதிஷிக்கு கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் தன்யா பாம்னியல் ஜாமீன் வழங்கினார்.

மேலும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஜாமீன் பத்திரத்தையும், அதே தொகையின் மதிப்பில் ஒரு ஜாமீனையும் தாக்கல் செய்யுமாறு அமைச்சர் அதிஷிக்கு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE