ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட்ட இளம்பெண் மரணம்: விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்

By காமதேனு

கேரளாவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணி உணவான 'குழிமந்தி'யை வாங்கி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் டிசம்பர் 31-ம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் ஆன்லைனில் வாங்கிய 'குழிமந்தி'யை சாப்பிட்டுவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், அங்கிருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலையில் உயிரிழந்தார். “அவரது பெற்றோர் புகார் அளித்த பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் சனிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டார். தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸார் தெரிவித்தனர்

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய வீனா ஜார்ஜ், “இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவினை வழங்கியதாக குற்றம் சாட்டப்படும் ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும்” என்றார்.

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் ஒருவர் கோழிக்கோட்டில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவை உட்கொண்டதால் இறந்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE