புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்த 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது: ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறை பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு முதல் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வைப்புத் தொகையாக செலுத்தப்படும்.
பணியில் சேருபவர்களுக்கு முதல் 4 ஆண்டுகளுக்கு தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும். அனைத்துத் துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ரூ.3000 அரசு செலுத்தும். முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தியாவில் உள்ள முன்னணியில் உள்ள முதல் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். 2024-24ம் நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.” இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உரையாற்றி வருகிறார்.
» 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
» கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு!