புனேயில் அதிவேகமாக வந்த கார் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதிவேகமே விபத்துகளுக்கு காரணம் என தெரிந்தாலும், சில ஓட்டுநர்கள் அவசர அவசரமாக வாகனத்தை ஓட்டி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. புனேவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில், பெண் சாலையில் நடந்து சென்ற போது, வேகமாக வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கிறது. இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த பெண்ணைக் காப்பாற்ற ஓடுகின்றனர். ஒருவர் காரை விரட்டிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கார் மோதி விபத்திற்குள்ளான பெண், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பாக பிம்ப்ரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து காவல் துறை டிசிபி சிவாஜி பவார் கூறுகையில், “ நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ரேகா படுகாயமடைந்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இல்லை என போலீஸார் உறுதி செய்துள்ளனர். வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது" என்றார். இந்தியாவில் ஹிட் அண்ட் ரன் விபத்துகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.