ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வி.கே.பாண்டியன் உதவினாரா? - நவீன் பட்நாயக் பதில்

By KU BUREAU

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்க தனது முன்னாள் உதவியாளர் வி.கே.பாண்டியன் உதவிபுரிந்தார் என்ற குற்றச்சாட்டை, பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் மறுத்துள்ளார்.

ஒடிசாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியன், அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். மேலும், இவர் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கொண்டுவரப்பட உள்ளார் என பேச்சுகளும் எழுந்தன. இந்நிலையில் ஒடிசாவில் கடந்த ஜூன் 1ம் தேதி நடந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். இந்நிலையில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை பிளவுப்படுத்தி, அங்கு பாஜக ஆட்சியை கொண்டுவர வி.கே.பாண்டியன் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உலா வருகின்றன. இச்சூழலில் இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், தனது முன்னாள் உதவியாளர் வி.கே.பாண்டியன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, அது தவறானது மற்றும் அவதூறானது எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் முன்பே கூறியது போல், வி.கே.பாண்டியன் அரசுக்கும் கட்சிக்கும் மிகுந்த அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் சேவையாற்றியுள்ளார். அதற்காக அவர் மதிக்கப்படுகிறார்.” என்றார்.

ஒடிசாவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அம்மாநிலத்தில் 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களை அக்கட்சி வென்றது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றது. மேலும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளில் 20 இடங்களை பாஜக வென்றது. காங்கிரஸ் ஓரிடத்தில் வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE