டெல்லி: டெல்லியைச் சேர்ந்த டீ விற்பனை செய்பவரின் மகள் 10 ஆண்டு உழைப்பிற்கு பிறகு சார்ட்டட் அக்கவுண்டன்ட் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பதிவு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் தெருவோரங்களில் நடந்து சென்றவர்கள் அவரை தினசரி பார்த்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கும் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர் நாடு முழுவதும் அறியப்பட்ட அரசியல்வாதியோ, சினிமா பிரபலமோ, விளையாட்டு வீரரோ அல்லது சமூக வலைதளங்களில் அன்றாடம் வீடியோக்களை வெளியிடும் இணையவாசியோ அல்ல.
Loading...
ஆனால் இன்று டெல்லியில் பெரும்பாலானவர்களுக்கும் பிரஜாபதியை நன்றாக தெரியும். அதுவும் அவரது மகள் படைத்திருக்கும் மாபெரும் சாதனையின் காரணமாக. ”டீ விற்பவரின் மகள் படிப்பதா? டீ விற்று பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க முடியுமா? இதற்கு பேசாமல் ஒரு வீட்டை கட்டுங்கள். வெட்டியாக பெண்ணின் கல்விக்கு செலவு செய்யாதீர்கள்.” இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களை பிரஜாபதி கேட்காத நாட்களே இல்லை.
அவரை சந்திக்கும் பெரும்பாலானோரும் அவரது ஏழ்மை நிலையை சுட்டிக்காட்டி, பெண்ணை படிக்க வைக்க பெருந்தொகையை செலவழிக்காதீர்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்திருக்கின்றனர். புன்னகையோடு இந்த எதிர்மறையான விமர்சனங்களை எல்லாம் கடந்த பிரஜாபதி, தனது மகள் கல்வியில் நிச்சயம் மேன்மை நிலையை அடைவார் என உறுதியாக நம்பினார்.
வீடு கட்டுவதை விடவும் தன் மகளின் கல்வி தான் முக்கியம் என பிரஜாபதி தொடர்ந்து தனது சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தியபடியே, மகளையும் படிக்க வைத்தார். தந்தையின் கடினமான வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்த்து வளர்ந்த அவரது மகள் அமிதா பிரஜாபதி, கல்வியில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
தன் தந்தையின் மீதான விமர்சனங்களுக்கான பதிலடி தன்னுடைய கல்விதான் என்பதை அவர் உறுதியாக நம்பினார். தீவிரமாக படித்து தற்போது தன் தந்தையை பெருமிதப்படுத்தும் வகையில் மாபெரும் சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். 10 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பிறகு அவர் பட்டய கணக்காளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இணைந்துள்ளார்.
தன்னுடைய கடினமான இந்த வாழ்க்கைச் சூழலை சுட்டிக்காட்டி லிங்க்ட் இன் இணையதளத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது 1.6 லட்சம் பாராட்டுகளையும் சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களையும் பெற்றுள்ளது.
பெரும்பாலானவர்களும் அமிதாவின் சாதனையை பாராட்டுவதோடு, அவரது தந்தையின் தியாகத்தையும் பாராட்டி வருகின்றனர். இப்போது அமிதா முன்பு இருப்பது ஒரே ஒரு விருப்பம் தான். தன் தந்தைக்காகவும், தாய்க்காகவும் வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்பதுதான் அவரது பெரு விருப்பமாக இருக்கிறது.
தான் சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆகிவிட்டத்தை கூறி, தந்தையை கட்டிப்பிடித்து அழும் அமிதாவின் வீடியோ சொல்லும் கருத்து ஒன்று தான். அமிதாவின் வார்த்தைகளில் இதை குறிப்பிடுவதானால், ”ஆம் கனவுகள் நிச்சயம் நடந்தேறும். நான் இப்போது இருக்கும் நிலைக்கு எனது தந்தையும் தாயும் தான் காரணம். ஒரு நாளும் இவர்களை விட்டுச் செல்வேன் என்று நான் நினைத்ததில்லை. ஆனால் என்னுடைய மகள்களை நிச்சயம் நான் கல்வி கற்க வைப்பேன், என்று உறுதியாக நம்புகிறேன்”.