நாடாளுமன்றம் தொடங்கியதுமே எதிரொலித்த நீட் தேர்வு விவகாரம்: அனல் பறந்த விவாதம்

By KU BUREAU

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடங்கிய முதல்நாளிலேயே அவையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று துவங்கி, வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையையும், நாளை, 2024-25ம் நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யதுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பெரிதாக எதிரொலித்து பரபரப்பை கிளப்பியது.

இச்சூழலில் நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் விவகாரம், ஜம்மு - காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவையில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியதுமே தமிழக எம்பி-க்கள் கலாநிதி வீராச்சாமி, மாணிக்கம் தாக்கூர், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) எம்பி- பிரேமச்சந்திரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நீட் தேர்வு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினர்.

அவையில் ராகுல் காந்தி பேசுகையில், “நீட் தேர்வு மட்டுமல்ல... அனைத்து முக்கியத் தேர்வுகளிலும் நமது தேர்வு முறையில் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பது அவருக்குப் புரியவில்லை என்று நான் நினைக்கவில்லை.

மில்லியன் கணக்கான மாணவர்கள் இது மோசடி என்று நம்புகிறார்கள். பணக்காரனாக இருந்தால், பணம் இருந்தால், இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். இதே உணர்வுதான் எதிர்கட்சியினருக்கும் உள்ளது. நீட் தேர்வு சிக்கலை சரிசெய்ய மத்திய அரசு என்ன செய்கிறது" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கூச்சலிடுவதால் பொய் உண்மையாகிவிடாது. நாட்டின் பரீட்சை முறையை குப்பை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதேபோன்ற மசோதாக்கள் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அழுத்தத்தின் காரணமாக அவற்றை ரத்து செய்தது.” என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதுமே அவையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் முதல் நாளிலேயே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE