ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் குண்டா பகுதியில் உள்ள ராணுவத்தினர் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தர். பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்ட கிராம பாதுகாப்புக் குழுவின் (விடிசி) உறுப்பினருமான பர்ஷோதம் குமாரின் வீட்டுக்கு அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதையும் ராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ராஷ்டிரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) பிரிவு, ஜம்மு காஷ்மீர் போலீஸ் (ஜேகேபி), மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ராணுவம் ஆகியவை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பை பலப்படுத்தவும், மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இந்திய ராணுவம் ஜம்மு பகுதியில் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. கதுவா, சம்பா, கதுவா உள்ளிட்ட தோடா, பதர்வா, கிஷ்த்வார் ஆகிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்குக் கட்டளைப் படையில் இருந்து மேலும் பல படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளனர். இதனால் ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் 9 அன்று ரியாசியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.