அனைத்துக்கட்சி கூட்டம்: துணை சபாநாயகர் பதவி, நீட் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள்  

By KU BUREAU

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டதில், துணை சபாநாயகர் பதவி, நீட் தேர்வுத்தாள் கசிவு, கன்வார் யாத்திரை போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பாஜக சார்பில் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் கட்சி சார்பில் கவுரவ் கோகாய், ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், எல்ஜேபி (ராம்விலாஸ் பஸ்வான்) சார்பில் அதன் தலைவர் சிரக் பஸ்வான், சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சய் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரஃபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கோரியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளை அனுமதிக்க வேண்டும் என கவுரவ் கோகாய் கூறினார். மேலும் அவர் துணை சபாநாயகர் பதவியை காலியாக விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆம்தி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.கள் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்ற உத்தரப் பிரதேச அரசின் உத்தரவு குறித்த பிரச்சினையை எழுப்பினர். கூட்டத்தில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்) கட்சிகள் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள பிஹாருக்கான சிறப்பு அந்தஸ்த்துக் கோரிக்கையை எழுப்பினர்.

அதேபோல் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்த்துக் கோரிக்கையை எழுப்பினர். மேலும் அவர்கள், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரால், தங்கள் கட்சியினர் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் அந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையீட வேண்டும் என்று கோரினர்.

இதனிடையே பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை எழுப்பாதது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம்\ ரமேஷ் விமர்சித்தார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில், "பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிஹாருக்கான சிறப்பு அந்தஸ்த்து குறித்த கோரிக்கையை ஐக்கிய ஜனதாதளம் கட்சி எழுப்பியது. ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்த்து கோரிக்கையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. விசித்திரமாக இந்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி மவுனமாக இருந்ததது" என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்கிறார். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை முடக்கும் வகையில், நீட் தேர்வுதாள் கசிவு முதல் ரயில்வே பாதுகாப்பு பிரச்சினைகள் வரை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE