சோனு சூட் Vs கங்கனா - உ.பி அரசு சர்ச்சையில் கருத்து மோதல்!

By KU BUREAU

புதுடெல்லி: கன்வர் யாத்திரை பாதை தொடர்பாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து சோனு சூட் - கங்கனா இடையே கருத்து மோதல் நிலவியது.

பிரபல வில்லன் நடிகரான சோனு சூட் தனது கருத்தாக, “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப் பலகை மட்டுமே இருக்க வேண்டும் அது: மனிதநேயம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், “ஏற்றுக் கொள்கிறேன். ஹலால் என்பதற்கு மாறாக மனிதநேயம் இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாலிவுட் கதை வசனகர்த்தா ஜாவீத் அக்தர், முதல்வர் யோகியின் உத்தரவை விமர்சித்ததுடன், “ஜெர்மனியின் நாஜிக்கள்தான் இதுபோல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்தி வந்தனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

பின்னணி என்ன?: வட மாநிலங்களில் நாளை ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை கன்வர் யாத்திரை எனும் காவடி யாத்திரை தொடங்குகிறது. ஆண்டுதோறும் இந்த புனித யாத்திரையின்போது சட்டம் ஒழுங்கை காப்பது உ.பி. அரசுக்கு சவாலாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட இந்த ஆண்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காவடி யாத்திரை பாதையில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் தள்ளு வண்டிகளில் உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் பெயர்களை எழுதி வைக்க முதல்வர் யோகி உத்தரவிட்டிருந்தார். தனது உத்தரவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘காவடி யாத்திரை போகும் வழியிலுள்ள கடை வியாபாரிகள் அனைவரும் தமது பெயர்களை கடைகளின் வெளியில் தெரியும்படி எழுதி ஒட்டி வைக்க வேண்டும். இது, காவடிகளின் புனிதத்தை காக்க உதவும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து மற்றும் முஸ்லிம் வேறுபாடு அரசியல் இருப்பதாக உ.பி. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்துள்ளன.

இது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, இதுபோன்ற உத்தரவு ஒரு சமூகக் குற்றமாகும். இதன் மூலம், உ.பி.யின் அமைதியான மதநல்லிணக்கச் சூழல் குலையும். இப்பிரச்சினையில் நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு: மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஊடகப் பிரிவின் தலைவரான பவன் கேரா, இதுபோன்ற உத்தரவு நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

உபியின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, மதநல்லிணக்கத்தை குலைக்கும் உத்தரவு இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE