புயலால் பாதிக்கப்படும் மக்களுக்காக அவசர உதவி எண்: சென்னையில் தயார் நிலையில் 169 நிவாரண மையங்கள்

By காமதேனு

'மேன்டூஸ்' புயலால் பாதிக்கப்படுவோர் அவசர உதவி மற்றும் புகார்களை 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்க வைக்க 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'மேன்டூஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. காரைக்காலில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்திலும் அது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது. புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. 'மேன்டூஸ்' புயலினால் மாமல்லபுரம் மற்றும் மரக்காணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களின் கீழ் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் மழைநீரை அகற்றும் பணி துரிதாக நடைபெற்று வருகிறது. அத்துடன் 'மேன்டூஸ்' புயலால் பாதிக்கப்படுவோர் அவசர உதவி மற்றும் புகார்களை 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்க வைக்க 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE