அனுமதியின்றி முதல்வரை சந்திக்க முயன்ற சிறைத்துறை காவல் அதிகாரி கைது: போலி ஐ.டி. கார்டு பறிமுதல்

By ரஜினி

அனுமதியில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மேடையேறிய சிறைத்துறை அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் மாளிகையில் நேற்று புதிதாக கட்சி பதவி ஏற்றுள்ள நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் அமர்ந்திருந்த மேடையில் சபாரி உடையில் இருந்தவர் ஏற முற்பட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது தான் சிறைத்துறை அதிகாரி என தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது சந்தேகமடைந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து பணியில் இருந்த தேனாம்பேட்டை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தேனாம்பேட்டை போலீஸார் அவரிடம் சோதனை செய்தபோது தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டையை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீஸார் அந்த நபரையும், அவருடன் வந்தவரையும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (42) என்பதும், அவர் பொள்ளாச்சி கிளைச் சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும், நேற்று விடுமுறை என்பதால் வசந்தகுமார் தனது நண்பர் நாட்ராயன் என்பவருடன் கோவையில் இருந்து 6.15 மணிக்கு கிளம்பி சென்னைக்கு விமானம் மூலம் 8.30 மணிக்கு வந்தார். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக விசாரணையில் தெரிவித்தனர்.

மேலும் அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் வருவதை அறிந்து கொண்ட வசந்தகுமார் தனது நண்பருடன் அங்கு வந்துள்ளார். நண்பர் நாட்ராயனை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு முதல்வரை சந்திக்க முற்பட்டபோது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டை வைத்திருந்த சிறைத்துறை அதிகாரி வசந்த குமார் மீது தேனாம்பேட்டை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE