பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் புதுச்சேரி மாநில அரசு; அதிமுக கடும் விமர்சனம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை புதுச்சேரி மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அதிமுக விமர்சித்துள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த மாதம் 18ம் தேதி துணை நிலை ஆளுநர் தலைமையில் திட்டக்குழு கூட்டப்பட்டது. நம்முடைய சொந்த நிதி வருவாய் மற்றும் வெளிச்சந்தை கடன் ஆகியவற்றை முடிவு செய்து இவ்வாண்டுக்கான பட்ஜெட் ரூ.12 ஆயிரத்து 700 கோடி என திட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்துக்கு பட்ஜெட்டுக்கான அனுமதியை 25 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை புதுச்சேரி மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு அவமதிக்கும் செயலாகும்” என்றார்.

மேலும், “பட்ஜெட்டுக்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பை கூட புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட முடியவில்லை. பட்ஜெட் அனுமதிக்கு துணைநிலை ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் டெல்லிக்குச் சென்று முயற்சித்தும் இதுவரை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

கடந்த காலங்களில் நான்கே நாட்களில் பட்ஜெட்டுக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் நமக்கு வழங்கியுள்ளது. ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் டபுள் இன்ஜின் பாஜக அரசு ஆட்சியில் உள்ள நிலையில் ஏன் பட்ஜெட்டுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை? காலத்தே பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படாததால் அரசின் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசின் பல்வேறு துறைகள் தற்போது செயலிழந்து போய் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் நிதிச் செயலாளரும், தலைமைச் செயலாளரும் நேரடியாக டெல்லிக்குச் சென்றால் ஒரே நாளில் பட்ஜெட்டுக்கான அனுமதியைப் பெற முடியும். இவர்களது பொறுப்பற்ற செயலால், இம்மாத இறுதியில் கூட்டப்பட வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

மாவட்ட ஆட்சியரின் திறந்தவெளி விளம்பரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது அறிவிக்கப்படும் தமாஷ் அறிவிப்பு போன்று சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பும் செயல்வடிவம் பெறாத அறிவிப்பாக உள்ளது. இதை ஆட்சியில் உள்ள சம்பந்தப்பட்ட அனைவரும் உணர வேண்டும். நம் மாநிலத்தில் கையூட்டு பெற்றுக்கொண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. அதன் மூலம் ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் அந்த போலி ரேஷன் கார்டுகளுக்கு அரிசிக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “இது சம்பந்தமாக ஆதாரத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்? ஒரு கார்டுக்கு ரூ.15 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஒன்றிரண்டு தினங்களிலேயே சிவப்பு ரேஷன் கார்டுகள் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் எப்படி வழங்கப்பட்டது? இதில் வெளிப்படையாகவே மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் நடைபெற்றிருந்தும் நடவடிக்கை இல்லை.

புதுச்சேரியில் ஊழல் தடுப்பு பிரிவு ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம் ஏற்படுகிறது. கையூட்டு பெற்றுக் கொண்டு தவறு செய்த அதிகாரிகளுக்காக ஆண்டுதோறும் மக்களின் வரிப்பணத்தை எடுத்து அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது என்பதை முதல்வரும், துணைநிலை ஆளுநரும் உணர்ந்துள்ளனரா என தெரியவில்லை. நடைபெற்ற முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.”

”இதற்கு மேலும் ஆளும் அரசு இந்த விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் உள்ளேயும், வெளியேயும் உள்ள போலி ரேஷன் அட்டை புரோக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி பெற்று இந்த அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE