நாடாளுமன்ற கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தம்

By KU BUREAU

புதுடெல்லி: வரும் 22ம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 90 வருட பழைய விமானச் சட்டத்திற்கு பதிலாக விமான வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் விதிகளை உள்ளடக்கிய மசோதா உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த பட்டியலிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மக்களவை கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி முதல் கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நிறைவடையும். இதில் முழு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

இதில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, 1934ம் ஆண்டின் விமானச் சட்டத்துக்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கு வழிவகை செய்யும் விதிகளை உள்ளடக்கிய புதிய மசோதா, நிதி மசோதா மற்றும் பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதாவை அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாட்டில் மேலும் தெளிவு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முன்மொழியப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதேபோல், பாரதிய வாயுயான் விதேயக் 2024, சுதந்திரத்துக்கு முந்தைய கால சட்டத்தை மாற்றுவதற்கான கொதிகலன்கள் (பாய்லர்கள்) மசோதா, காபி (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா, ரப்பர் (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா ஆகிய 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.

சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவில் சுதீப் பந்தோபாத்யாய் (திரிணமூல் காங்கிரஸ்), பி.பி. சவுத்ரி (பாஜக), லாவு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயலு (தெலுங்கு தேசம்), நிஷிகாந்த் துபே (பாஜக), கவுரவ் கோகோய் (காங்கிரஸ்), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), திலேஷ்வர் கமைத் (ஜேடியு), பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக), தயாநிதி மாறன் (திமுக), பைஜயந்த் பாண்டா (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனா- உத்தவ் தாக்கரே பிரிவு), கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), அனுராக் தாக்கூர் (பாஜக), லால்ஜி வர்மா (சமாஜ்வாதி) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE