கேரளாவை மிரட்டும் எச்1என்1 வைரஸ் காய்ச்சல்: 4 வயது சிறுவன் பலி

By KU BUREAU

எர்ணாகுளம்: எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது

கேரளா மாநிலத்தில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலப்புரத்தில் எச்1என்1 வைரஸால் பொன்னானியைச் சேர்ந்த சைபுனிசா பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சூர் குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் ஆலங்காடு ஒலநாடு பகுதியைச் சேர்ந்தவர் லியோன் லிபு(4). காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் லியோன் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார். இதனால் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் கேரளாவில் உயிரிழப்பு இரண்டாகியுள்ளது.

காற்று மூலம் பரவும் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் தொண்டை வலி, மூச்சுத்திணறல், இருமல், ரத்தம் வருதல், உடல்வலி மற்றும் வாந்தி, காய்ச்சல் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் உயரும். அத்துடன் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது அல்லது இருமும்போது வாயையும், மூக்கையும் துணியால் மூட வேண்டும்.

அத்துடன் இந்த வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் முழு ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அவர்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது தொற்று அபாயத்தைக் குறைக்கும்.

எனவே சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE