கர்நாடகாவில் 8 அமைச்சர்களை நீக்க வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி

By KU BUREAU

பெங்களூரு: கர்நாடகா அமைச்சரவையில் இருந்து 7 அல்லது 8 அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஊழல்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி (சிஎல்பி) கூட்டத்தை முதல்வர் சித்தராமையா நேற்று இரவு கூட்டியிருந்தார். இதில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், 7 அல்லது 8 அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் தங்கள் மனுக்கள், குறைகளுக்குப் பதிலளிக்காததாலும், கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திறம்பட செயல்படாததாலும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, இக்கூட்டத்தில் வினய் குல்கர்னி, ராஜு காகே, மாலுரு நஞ்சேகவுடா ஆகியோர் காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது. தங்கள் தொகுதிகளுக்கு போதிய நிதியை வளர்ச்சிப் பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசினர். நிதியில்லாமல் களத்தில் இறங்குவது கடினம். மானியத்திற்காக ஒரு ஆண்டாக காத்திருக்கிறோம். எங்கள் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்றும் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் சித்தராமையாவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE