ஒரு வீட்டிற்கு ரூ.4.02 கோடி மின் கட்டணமா? - ரயில்வே ஊழியர் அதிர்ச்சி

By KU BUREAU

நொய்டா: ஒரு வீட்டிற்கு ரூ.4.02 கோடி மின் கட்டணம் விதிக்கப்பட்டதைப் பார்த்து அந்த வீட்டின் உரிமையாளரான ரயில்வே ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் செக்டார்டின் சி 103 என்ற வீட்டின் முகவரியில் வசிப்பவர் பசந்த் ஷர்மா. இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். தற்போது சிம்லாவில் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். நேற்று இவரது செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஜூலை 18-ம் தேதி வரையிலான மின் கட்டணம் பில் தொகை 4,02,31,842.31 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தினால் வாடிக்கையாளரின் மொத்த தொகையில் ரூ.2.8 லட்சம் தள்ளுபடி பெறலாம் என்றும், ஜூலை 24-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சர்மா அதிர்ச்சியடைந்தார். ஒரு வீட்டிற்கு 4.02 கோடி ரூபாய் எப்படி மின்கட்டணம் வரும் என்று அவர் குழப்பமடைந்தார்.

இதுகுறித்து சர்மா கூறுகையில்," நான் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளேன். அந்த வீட்டில் வசிக்கும் வாடகைதாரர் தேவையான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார். நான் வெளியூரில் இருப்பதால், எனக்கு எஸ்எம்எஸ் வந்தவுடன் டிஸ்காமின் ஜூனியர் இன்ஜினியரை அழைத்தேன். இதற்கு மின் பகிர்மான நிறுவனத்தின் தவறான மீட்டர் ரீடிங்தான் காரணம் என்றும், சரி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்" என்றார்.

சர்மா வீட்டில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 85,936 யூனிட் மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டதாகவும், ஜூன் 22-ம் தேதி ரூ.1,476 செலுத்தப்பட்டதாகவும் பில் காட்டுகிறது. ஜூலை 18 அன்று எடுக்கப்பட்ட தற்போதைய மீட்டர் ரீடிங் 90,144 யூனிட்களைக் காட்டுகிறது. இதன்படி நிலுவைத் தொகை ரூ.4.02 கோடி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்துறையின் செயல் பொறியாளர் சிவம் திரிபாதி கூறுகையில்," சர்மாவின் புகார் குறித்து மின் துறையினர் உடனடியாக ஆய்வு செய்தனர். அப்போது மீட்டர் ரீடிங் சரியாக எடுக்கப்படவில்லை என்று தெரிந்தது. இந்த விவகாரம் எஸ்டிஓ கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதிய ரீடிங் எடுத்து புதிய பில் வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். இதனால் பசந்த் சர்மா நிம்மதியடைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE