நிப்டி 24,800 புள்ளிகளை தொட்டது: 81,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய சாதனை

By KU BUREAU

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் முதன் முறையாக 81,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. நிப்டியும் புதிய உச்சமாக 24,800 புள்ளிகளை தொட்டது.

பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, எப்எம்சிஜி துறைகளைச் சேர்ந்தபங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்சியல் நிறுவன அதிகாரி வினோத் நாயக் கூறுகையில், “டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜூன் காலாண்டு செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வட்டி விகித குறைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க கடன்பத்திரங்கள் மீதான வருவாய் குறைவது இந்திய பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவன முதலீடுகள் குவிவதற்கு வழிவகுத்துள்ளது. பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு இது முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ் பங்கின் விலை 3.33 சதவீதமும், இன்போசிஸ் 1.93 சதவீதமும் உயர்ந்தன. பஜாஜ்பின்சர்வ், மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எஸ்பிஐ, ஹெச்சிஎல் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.

30 முன்னணி நிறுவன பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 626.91 புள்ளிகள் உயர்ந்து முதன் முறையாக 81,343.46 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 187.85 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 24,800.85 புள்ளிகளில் நிலைகொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE