வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை 7 நாள் மூட கர்நாடக அரசு உத்தரவு

By KU BUREAU

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரியை சேர்ந்தவர் பக்கீரப்பா (66). இவர், தனது மகன் நாகராஜுடன் பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அப்போதுவணிக வளாகத்தின் காவலர், முதியவர் பக்கீரப்பா வேட்டி, சட்டை, தலைப்பாகை அணிந்திருந்ததால் உள்ளே அனுமதிக்க மறுத்தார்.

இதையடுத்து நாகராஜ் கன்னட அமைப்பினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். கன்னட அமைப்பினர் வணிக வளாகத்தின் காவலர் மற்றும் நிர்வாகியுடன் வாக்குவாதம் செய்து, அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்ப‌ந்தப்பட்ட வணிக வளாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில் கர்நாடக அமைச்சர் பைரத்தி சுரேஷ் நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில், “கிராம முதியவரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட வணிக வளாகத்தை 7 நாட்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE