புதுடெல்லி: புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முழு பலத்தை எட்டியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். மணிப்பூரில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெருமையை கோடீஸ்வர் சிங் பெற்றார்.
முழு பலத்தை எட்டியது: இரு புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையானது அதன் முழு பலமான 34-ஐ எட்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி 2024 செப்டம்பர் 1-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அதுவரை 34 நீதிபதிகள் என்ற முழு பலத்துடன் உச்ச நீதிமன்றம் செயல்படும். அதன் பிறகு வரும் நவம்பர் 10-ம்தேதியுடன் தலைமை நீதிபதி சந்திரசூட்டும் ஓய்வுபெற உள்ளார்.
» சண்டிகர் - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பயணிகள் உயிரிழப்பு
» 100 எம்எல்ஏ.க்கள் பிரிந்து வந்தால் ஆட்சி அமைக்கலாம்: பாஜகவினருக்கு அகிலேஷ் யாதவ் சூசக அழைப்பு
முன்னாள் தலைமை நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, அனிருந்தா போஸ் ஓய்வுபெற்றதையடுத்து அந்த இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜூலை 16-ம் தேதி செய்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து நீதிபதிகள் மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.