ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு

By KU BUREAU

சண்டிகர்: வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் அங்குள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

ஹரியாணா சட்டப் பேரவைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் ஹரியாணா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்.பி- சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் சந்தீப் பதக் ஆகியோர் சண்டிகரில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக அறிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "ஹரியாணாவில் முழு பலத்துடன் போராட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பாஜகவின் 'டபுள் என்ஜின்' அரசு உள்ளது. ஆனால், அவர்களது ஆட்சி ஹரியாணா மாநிலத்தை சீரழித்துள்ளது. இந்த இரட்டை இயந்திர அரசாங்கத்தில் விவசாயிகள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

ஹரியாணா இளைஞர்கள் பெருமையுடன் ராணுவத்தில் சேர்ந்து, மகிழ்ச்சியுடன் தங்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள். ஆனால் அக்னிவீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.” என தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இணைந்து டெல்லியில் தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் அங்குள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட இக்கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE