போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனம்: அதிரடி காட்டியது சென்னை போலீஸ்

By ரஜினி

போக்குவரத்து விதிமீறலில் தமிழக பெண் ஏ.டி.ஜி.பி.யின் அரசு வாகனம் ஈடுபட்டதாக காவல்துறை 500 ரூபாய் அபராதம் விதித்தது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமீறல்களுக்காக போக்குவரத்து போலீஸார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஏ.டி.ஜி.பி அந்தஸ்து உடைய அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் 3 ஸ்டார் பதித்த வாகனம் ஒன்று நேற்று திருவான்மியூர் பகுதியில் ஒருவழிப்பாதையில் சென்றதைப் பொதுமக்கள் பார்த்தனர்.

பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அவர் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை, புகாரில் குறிப்பிடப்பட்ட ஏ.டி.ஜி.பி அந்தஸ்துடைய பெண் அதிகாரியின் வாகனத்தை ஓட்டி வந்த காவலருக்கு ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் சம்பந்தப்பட்ட காவலருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புகார் அளித்த நபருக்கு பெண் ஏடிஜிபியின் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட செலான் மற்றும் நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் போக்குவரத்து காவல்துறை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE